சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: விசாரணையில் சிக்கிய ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு!
ஆஸ்திரேலியா, சிட்னி – Bondi கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஆரம்பமான 29 வினாடிகளுக்குள் 11 பேர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேற்படி படுகொலை குறித்து விசாரிக்கும் அரச ஆணைக்குழுவில் (Royal Commission) தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்த அரச ஆணைக்குழு (Royal Commission , கடந்த 2025 டிசம்பர் 14 அன்று Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகளை ஆராயும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக, ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைமை இயக்குநர் Mike Burgess மற்றும் ஆஸ்திரேலிய federal காவல்துறையின் (AFP) உதவி ஆணையர் Stephen Nutt உள்ளிட்ட பல முக்கிய உளவுத்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மூன்று வாரங்களில் பெருமளவிலான விசாரணைகள் ரகசியமாக நடத்தப்படவுள்ளன.
இந்த விசாரணையின் தொடக்க உரையில், ஆணைக்குழுவிற்கு உதவும் சட்டத்தரணி Richard Lancaster SC கருத்து வெளியிடுகையில்,
” இலக்கு வைக்கப்பட்ட ‘கடற்கரையில் ஹனுக்கா’ (Chanukah by the Sea) நிகழ்வில் இத்தகைய ஆயுதமேந்திய தாக்குதல் நடக்கும் என்று சட்ட அமலாக்க அல்லது உளவு அமைப்புகளுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை.” என்றார்.
எனவே, இதனை ஒரு “திடீர் தாக்குதல்” என்று வர்ணிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
துப்பாக்கிதாரிகளான நவீத் அக்ரம் (Naveed Akram) மற்றும் சாஜித் அக்ரம் (Sajid Akram) ஆகியோர் தாக்குதலைத் தொடங்கிய 29 வினாடிகளுக்குள் 11 பேர் சுடப்பட்டனர், அவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று லான்காஸ்டர் தெரிவித்தார்.
தாக்குதல் தொடங்கியபோது நியூ சவுத் வேல்ஸ் (NSW) காவல்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் அங்கு இருந்தனர், ஐந்து நிமிடங்களுக்குள் இந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
இத்தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் சுடப்பட்டு காயமடைந்தனர், மேலும் தாக்குதல் தொடங்கிய ஏழு நிமிடங்களுக்குள் இரு துப்பாக்கிதாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
உளவுத்துறையின் நிதி மற்றும் முன்னுரிமை மாற்றம்
கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில், ஆஸ்திரேலிய அரசு நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் அளவை ‘சாத்தியம்’ (Possible) என்பதிலிருந்து ‘அதிக வாய்ப்புள்ளது’ (Probable) என்று உயர்த்தியிருந்தது.
தேசிய அச்சுறுத்தல் நிலைக்கு ASIO அமைப்பின் எதிர்வினை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான அதன் வள ஒதுக்கீடு ஆகியவை இந்த விசாரணையின் முக்கிய கேள்விகள் என்று அரச ஆணைக்குழுவின் ஆணையர் வர்ஜீனியா பெல் (Virginia Bell) அடையாளம் கண்டுள்ளார்.
ஆணையர் பெல்லின் இடைக்கால அறிக்கையின்படி, 2020 முதல் 2025 வரை ஆஸ்திரேலியாவின் உளவு அமைப்புகளில் பயங்கரவாத எதிர்ப்பிற்கான நிதி ஒதுக்கீடு “குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது” என்று தெரியவந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில், ASIO அமைப்பின் முன்னுரிமையானது பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதிலிருந்து, உளவு வேலைகள் (Espionage) மற்றும் வெளிநாட்டு தலையீடுகளைத் தடுப்பதை நோக்கி மாறியிருந்தது.
இருப்பினும், இக்காலகட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதி மற்றும் பணியாளர்கள் போதுமான அளவில் இருந்ததாக ASIO தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் வாதிட்டார்.
“நாங்கள் சோதித்த ஒவ்வொரு இடத்திலும், விசாரிக்கப்பட வேண்டிய உளவு வேலைகளையும் வெளிநாட்டு தலையீடுகளையும் கண்டறிந்தோம். எனவே, வளங்கள் அங்கு மாற்றப்பட்டன.
அதேநேரம், எந்தவொரு தீவிரமான பயங்கரவாத விசாரணையும் கவனிக்கப்படாமல் விடப்படவில்லை என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்,” என்று அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
“எங்களால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது”
பாண்டி பீச் தாக்குதலுக்கு முன்னதாக, அந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் குறித்து ASIO அமைப்பிடம் இருந்த உளவுத் தகவல்களின் தன்மை பற்றி பர்கெஸிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.
ஆயினும், தங்களுடைய தீவிரவாதக் கருத்துக்களை நேரிடையாகவோ அல்லது இணையத்திலோ வெளிப்படுத்தாத நபர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டார்.
“எங்களால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்களும், அனைத்தையும் அறிந்தவர்களும் அல்ல; அப்படி இருக்க நாங்கள் விரும்பவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மைக் பர்கெஸ் மீண்டும் ரகசிய விசாரணையின் போது சாட்சியமளிக்க அழைக்கப்படுவார் என்று ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையின் உதவி ஆணையர் ஸ்டீபன் நட், NSW காவல்துறையின் லீன் மெக்குஸ்கர் மற்றும் யூத பாதுகாப்பு குழுவான CSG இன் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.




