உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: கொலம்பியா வீரருக்கு மரண அச்சுறுத்தல்
உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்தவொரு வீரரோ அல்லது அவர்களது நெருங்கிய வட்டத்தில் உள்ள எவருமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது,” என்று கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு (FCF தெரிவித்துள்ளது.
16-வது சுற்று ஆட்டத்தில் (round of 16) சுவிட்சர்லாந்திடம் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை கொலம்பியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.
கூடுதல் நேர ஆட்டத்தின் போது (extra time), அர்ஜென்டினாவின் ‘ரொசாரியோ சென்ட்ரல்’ கிளப் அணிக்காக விளையாடும் காம்பாஸ், கோல் அடிப்பதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை தவறவிட்டார்; அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்டிற்கு வெளியேயாகச் சென்றது.
இதனைத் தொடர்ந்து, காம்பாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விரக்தியில் தனது முகத்தை மூடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தங்களுக்கு மதிப்பளிக்குமாறு ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
“கால்பந்து என்பது கடினமான தருணங்களையும் உள்ளடக்கியது தான்,” என்று அவர் எழுதியுள்ளார்.
“எனது கொலம்பியா மக்களே, தயவுசெய்து பரஸ்பர மரியாதையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நாம் வெவ்வேறு விதமாக சிந்திக்கலாம் அல்லது விரக்தியையும் சோகத்தையும் உணரலாம், ஆனால் எந்தவொரு வெறியும் வெறுப்பையோ அல்லது அச்சத்தில் வாழ்வதையோ நியாயப்படுத்தாது.” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, மிரட்டல்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறியும் விசாரணையை விரைவுபடுத்துமாறு நாட்டின் சட்டமா அதிபர் அலுவலகத்தை கொலம்பிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த மிரட்டல்கள், கொலம்பிய கால்பந்து வரலாற்றின் ஒரு கருப்புப் பக்கத்தை நினைவூட்டுகின்றன.
அமெரிக்காவில் நடைபெற்ற 1994 உலகக் கோப்பையின் போது, கொலம்பிய தற்காப்பு ஆட்டக்காரர் ஆண்ட்ரெஸ் எஸ்கோபார் (Andres Escobar) தவறுதலாகத் தங்கள் அணிக்கு எதிராவே (own-goal) கோல் அடித்தார்.
இதனால் அந்தப் போட்டியில் அமெரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் கொலம்பியா தோற்றது. அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பிய சில நாட்களிலேயே, எஸ்கோபார் மெடலின் (Medellin) நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




