நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார்.
உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் மறைவுக்குப் பின் தாயாரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்த நிலையில், இந்த அகால மரணம் அந்தத் தாயையும் உறவினர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





