7 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ்.மீனவர்கள்!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாள்களின் பின்னர் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு, கடல் நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ். மீனவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள், தமது விசைப்படகு மூலம் அவர்களை இழுத்துச் சென்றுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கிய தமிழக மீனவர்கள், பின்னர் அவர்களை இலங்கை கடல் எல்லை வரை கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும், பலத்த கடல் அலையின் காரணமாக மீனவர்களின் படகு மீண்டும் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்தநிலையில், கடலில் காணாமல்போய் ஏழு நாள்களின் பின்னர், இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் மேற்படி மீனவர்கள் இருவரும் கரை ஒதுங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த இந்தியக் கடலோர காவல் படையினர் மீனவர்களைப் பொறுப்பேற்றுள்ளதுடன், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





