உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!
வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் மரணம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விபத்துத் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




