உலக சாம்பியனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்
‘செஸ்’ உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Chess.com இணையதளம் நடத்திய Titled Tuesday தொடரின் இரண்டாவது சுற்றில் இப்போட்டி நடைபெற்றது.
வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய வந்தன் (தரவரிசை: 2,288), உலகின் முன்னணி வீரரான கார்ல்சனை (தரவரிசை: 2,823) எதிர்கொண்டார்.
இப்போட்டி குறித்துப் பேசிய வந்தன், “இழப்பதற்கு எதுவுமில்லை, அடைவதற்கு நிறைய இருக்கிறது என்ற மனநிலையிலேயே விளையாடினேன். எனக்குப் பழகிய ‘e4’ நகர்த்தலுடன் ஆட்டத்தைத் தொடங்கினேன்” என்றார்.
‘ஜியூகோ பியானோ’ (Giuoco Piano) முறையில் அமைந்த இந்த ஆட்டம், 26-வது நகர்த்தல் வரை சமநிலையில் நீடித்தது. அப்போது கார்ல்சன் செய்த ஒரு பெரும் தவறைச் சாதகமாகப் பயன்படுத்திய வந்தன், ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 50-வது நகர்த்தலில் வெற்றியை உறுதி செய்தார்.
பெற்றோருக்குத் தெரியாமல் கிடைத்த வெற்றி
இந்தத் தொடரில் பங்கேற்கவே வந்தன் முதலில் தயக்கம் காட்டியதாக அவரது தாயார் டாக்டர் மாதவி அலங்கார் சவாய் தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்த பிறகும் கார்ல்சனை வீழ்த்திய செய்தியை வந்தன் உடனடியாக வீட்டில் கூறவில்லை. தந்தை கேட்டுத் தெரிந்த பின்னரே இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பயிற்சியாளர் குர்பிரீத் பால் சிங்கிற்கும் மறுநாளே செய்தி தெரியவந்துள்ளது.
நான்கு சுற்றுகள் முடிவில் 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியைப் பதிவு செய்திருந்த வந்தன், சோர்வு காரணமாகத் தொடரிலிருந்து விலகினார்.
தற்போது சர்வதேச மாஸ்டர் (International Master) பட்டத்தைக் கைப்பற்றுவதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள வந்தன், செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.




