ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்
ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் மத்திய, வடக்கு ஆஸ்திரேலியப் பகுதிகளில் காய்ந்த தாவரங்கள் மற்றும் புற்கள் (எரிபொருள் பயன்பாடு போல செயல்படுபவை) அதிகளவில் குவிந்துள்ளதே இந்த ஆபத்திற்கு முக்கியக் காரணமாகும்.
“வெவ்வேறு பிராந்தியங்களில் நிலவும் பல்வகை ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் உள்ளூர் வானிலைச் சூழலைப் புரிந்து கொண்டு முன்கூட்டியே தயாராக வேண்டும்” என்று AFAC தலைமைச் செயல் அதிகாரி ராப் வெப் தெரிவித்துள்ளார்.
மேலும், “சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் அதிகமாக இருந்தாலும், வழக்கமான சூழ்நிலை கொண்ட பகுதிகளிலும் காட்டுத்தீ பரவக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு யூனியன் பிரதேசத்தில் (Northern Territory) வசந்த காலத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்தாலும், காய்ந்த புற்களின் பரவல் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் தீ விபத்துக்கான சாத்தியக்கூறுகள் உயர்ந்துள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகளவு உலர்ந்த தாவரங்கள் மற்றும் நிலத்தில் நிலவும் வறட்சி காரணமாகச் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயம் தீவிரமாக உள்ளது.
“அலட்சியம் வேண்டாம்”
கடந்த மாதத்தில் வடக்கு மற்றும் மத்திய ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழை பெய்த போதிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பெரும்பாலான இடங்களில் வழக்கத்திற்கு மாறான வறட்சி நிலவியது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையும் சராசரியை விட அதிகமாகவே இருந்தது. இந்த வெப்ப அலை வசந்த காலம் முழுவதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




