இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 8 என்புத் தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் இலக்கமிடப்பட்டுள்ளன.

அவற்றில் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, 260 என இலக்கமிடப்பட்ட குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், 259 என இலக்கமிடப்பட்ட சிறுவர் ஒருவருடைய எலும்புக்கூட்டுத் தொகுதியும் சில சென்டிமீற்றர்கள் தொலைவில் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், நேற்றைய அகழ்வாய்வின் போது இரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றன் மீது ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளன.

அதில் ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதியின் மண்டையோடானது, மற்றைய எலும்புக்கூட்டுத் தொகுதியின் கால் பகுதிக்கு மேல் தனியாகக் காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நீதிமன்றப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, அகழ்வாராய்ச்சிக் குழியில் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் குவியல்களாகவும் நேற்றுத் தென்பட்டுள்ளன.

அவை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டுத் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அது தொடர்பான துல்லியமான விவரங்களைக் கூற முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் கழுத்துப் பகுதியிலிருந்து செப்பினால் செய்யப்பட்டது என நம்பப்படுகின்ற ‘தாயக்கூடு’ (தாயக்கட்டு) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வழக்கின் 101ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பகுளிலிருந்தும், இதுவரை மொத்தமாக 270 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 266 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நீதிமன்ற உத்தரவாதத்துடன் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!