அமெரிக்காவின் முற்றுகை – ஈரானின் பதிலடி: நடுங்கும் வளைகுடா நாடுகள்
ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18) மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளது.
இருதரப்பும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளையும் இலக்கு வைத்துள்ளன. ஈரான் மீது தாங்கள் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேநேரம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்வதற்கான விதிமுறைகளை மீறிய கப்பல்களையே தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
அரசியல் அழுத்தம் மற்றும் உலகளாவிய தாக்கம்
இந்த மோதல்களின் பின்னணியில், வெள்ளிக்கிழமை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, கடந்த ஒரு மாதத்தில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
வரவிருக்கும் நவம்பர் மாத நாடாளுமன்றத் தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கப் போராடி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவருக்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததில் இருந்தே வாஷிங்டனும் தெஹ்ரானும் தீவிரப் போர்ச் சூழலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இது ஒரு முழுமையான போராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
ஈரானின் கண்காணிப்பு மையங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புத் தளங்களை இலக்கு வைத்து அண்மைய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (Central Command) தெரிவித்துள்ளது.
“அமெரிக்கப் படைகள் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்களை இத்தாக்குதலில் பயன்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்நேரமும் தாக்குதலுக்குத் தயாராக, விழிப்புடன் உள்ளனர்” என்று மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கவலை
ஈரானிலும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள சிவிலியன் (பொதுமக்கள்) உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர் தீவிரமடைவது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தப்போவதாக ட்ரம்பும் எச்சரித்துள்ளார். ஈரானின் கடற்கரை அல்லது தீவுகள் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதையும் அவர் நிராகரிக்கவில்லை.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள், பலவீனமான வளைகுடா நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை ஈரான் ஆதரவுப் படைகள் முடக்குவதற்கோ வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க விமானத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீதும், வட இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்கக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புப் பிரிவு பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக இரண்டு இடங்களில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது, எனினும் சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
ஈரானியத் தாக்குதலில் குவைத்தின் மின் உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தாக்கப்பட்டு, கடுமையான சேதம் மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பெருமளவிலான மின் உற்பத்தி அலகுகள் முடங்கியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் ட்ரோன் தாக்குதல்களுக்குத் தங்களது இராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகக் குவைத் இராணுவம் பின்னர் தெரிவித்தது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்கப் படைகளுக்கு விநியோகிக்கப்படும் இராணுவத் தளவாடக் கிடங்கு ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.




