தமிழர் பிரச்சினைகளை மறந்து செயல்படுகிறத அநுர அரசு
“தமிழர் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை” என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் குறித்துக் குறை கூற முடியாது. அவர்களுக்கு அனுபவம் சற்றுக் குறைவாக இருப்பதால் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், அவர்கள் ஊழல்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர்; போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அரசு நிறுவனங்களுக்கான நியமனங்களின்போது நீதிக்கேற்பவே செயல்படுகின்றனர்; தான்தோன்றித்தனமாகச் செயல்படவில்லை. அந்த வகையில் அவர்களின் நடவடிக்கைகளை நான் மதிக்கின்றேன்.
இதேபோன்று அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
ஆனால், இவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. தமிழர் பிரச்சினை தொடர்பாக இதற்கு முந்தைய சிங்களத் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ, அதேபோலவே இவர்களும் செயல்படுகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குக் குறைவான நிதி மற்றும் சலுகைகளே ஒதுக்கப்படுகின்றன. இது போன்ற பல பிரச்சினைகள் இன்னமும் நீடிக்கின்றன.
இருப்பினும், கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சியின் கீழ் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது; ஊழல்கள் இல்லை” என்று சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.




