எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் சரமாரியான கேள்வி – சூடுபிடித்த தமிழக தேர்தல் களம்
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், இன்று பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு – ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியானர்.
இங்கு கருத்து தெரிவித்த விஜய்,
“10 தடவை தோற்றவர், ‘ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார்’ எனச் சொல்கிறார். நீங்கள் சேலத்தின் அருகே இருக்கும் தொகுதியில் மட்டுமே பதுங்கிக்கொள்ளாமல், தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு தொகுதியில்
நின்று வெற்றி பெற முடியுமா? சொந்தத் தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் எனும் அச்சத்தில்தான் நமது சின்னத்தையே திருடிவிட்டார்” என்றார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக தரப்பில் அருண்குமார் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை நடந்த அன்று அவர் திடீரென அங்கிருந்து காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு தவறான தகவல்களை வேட்புமனுவில் கொடுத்திருந்ததே என விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், அதிமுக தோல்வி பயத்தின் காரணமாக அவரை கடத்திவிட்டதாக குற்றச்சாட்டை தவெகவினர் முன்வைத்தனர்.
இந்நிலையில், இன்றைய இறுதி கட்ட பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் அதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் என கூறியிருக்கிறார்.





