ஆசியாவை அமெரிக்கா புறக்கணிக்காது : பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தல்
ஈரான் போர் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்பு பொறுப்புகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தாலும், ஆசியப் பிராந்தியத்தை புறக்கணிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார் .
தைவான் தொடர்பான ஆயுத ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு அர்ப்பணிப்பு தொடரும் என்றும், ஆயுத ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, பிராந்திய நாடுகள் தங்களது பாதுகாப்பிற்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
சீனா தனது இராணுவ வலிமையை விரிவுபடுத்தி வருவது குறித்து கவலை வெளியிட்ட ஹெக்ஸெத், அமெரிக்கா தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க விரும்புவதாகவும் கூறினார்.
இந்தக் கருத்துகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை நடைபெற்ற ஷாங்க்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில், ஜப்பான் அரசியல்வாதி ஷின்ஜிரோ கொய்சுமி, அமெரிக்காவின் பிராந்திய அர்ப்பணிப்பு குறித்து நிலவும் சந்தேகங்களுக்கு பதிலளிக்குமாறு ஹெக்ஸெத்திடம் கேட்டுக்கொண்டார்.
சில நாடுகள் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுவதுடன், அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.




