சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ் சலே!
குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்றிரவு அவருக்கு ஒரு கரண்டி சோறும் முள்ளங்கி சொதியும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பழைய செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்டதால், உணவு நிலத்தில் கொட்டியுள்ளது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னை நாயை விட மோசமாக நடத்துகிறார்கள் என, இன்று காலை அவரைச் சந்தித்த மகனிடம் அழுது புலம்பியுள்ளார்.
சாலே 6×4 அடி அளவுள்ள மிகச்சிறிய அறையில் அடைக்கப்பட்டு, 40 நாட்கள் வெறும் தரையிலேயே தூங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவரது முகத்திற்கு நேரே 24 மணித்தியாலங்களும் பிரகாசமான மின்விளக்கு ஒளிரவிடப்படுவதால் அவரால் தூங்க முடியாமல் அவதிப்படுவதுடன், கடுமையான புரத மற்றும் விற்றமின் குறைபாடுகளாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சாலே உயிர்மாய்த்துக் கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏப்ரல் 29ஆம் திகதி, மருத்துவர்கள் எச்சரித்திருந்தும், அனுர அரசாங்கம் வேண்டுமென்றே அவரை சித்திரவதைக்கூடத்திலேயே வைத்துள்ளது என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.




