ஈரான் அணி நிர்வாகிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்கவுள்ள ஈரான் தேசிய கால்பந்து அணியின் முக்கிய பின்னணி நிர்வாகிகளுக்கு (Backroom staff) விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் வீரர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் உறுதிப்படுத்திய சில மணித்தியாலங்களிலேயே இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஜூன் 15ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ள ஈரானின் முதலாவது போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை ஈரான் வீரர்கள் மற்றும் “அத்தியாவசிய உதவிப் பணியாளர்களுக்கு” விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, “போலியான காரணங்களைக் கூறி பயங்கரவாதிகளை அமெரிக்காவிற்குள் கடத்துவதற்கு, இந்த விசா நடைமுறையை ஈரான் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அமெரிக்கத் தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
துருக்கியில் உள்ள ஈரான் தூதரகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அணியின் “மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணியாளர்கள்” மற்றும் “தொழில்நுட்ப ஆலோசகர்கள்” பலருக்கு விசா மறுக்கப்பட்டிருப்பது, “விளையாட்டில் அரசியல் ரீதியாக உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட தலையீடு” என ஈரான் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு உண்மைகளை மறைக்கும் ஒரு செயல் என விமர்சித்துள்ள ஈரான் தூதரகம், சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கிண்ணக் கால்பந்து தொடர் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று ஈரான் உலகக்கிண்ணத்திற்குத் தகுதி பெற்றிருந்தது. அதன் பின்னரே இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.




