86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலையான சுற்றுச்சூழலை நோக்கமாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கைக்குள், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், ஆரோக்கியமான சமூகம் மற்றும் சமநிலையான சூழலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிலையான வளர்ச்சிப் கட்டமைப்பிற்குள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு உடன்படிக்கையின் (UNFCCC) கொள்கைகளுக்கு இணங்க, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிக்கு இலங்கை தற்போது தீவிரமாகப் பங்களித்து வருகின்றது.

இத்திட்டத்திற்கு இணங்க, 2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வையொட்டி மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் முன்னணி அரச, தனியார் மற்றும் தொண்டர் அமைப்புகளின் பங்களிப்புடன் நாடு முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், இம்முறை உலக சுற்றாடல் தின நிகழ்வை முன்னிட்டு ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 வனங்கள், வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வும் இதன் போது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
“சொபா” சுற்றுச்சூழல் சஞ்சிகையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பதிப்பு, “சொபா கெத” சுற்றுச்சூழல் சஞ்சிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நூல் வெளியீடும் இதன்போது நடைபெற்றது.
இம்முறை தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு, பூச்சிய கார்பன் உமிழ்வு திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

காலநிலை மாற்றப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கும், உலக சுற்றாடல் தினக் கருப்பொருளின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடத்தப்பட்ட சூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி,
ஐக்கிய நாடுகள் சபையினால் உலக சுற்றாடல் தினம் 1972 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் இரண்டாவது உலக சுற்றாடல் தினத்தை இன்று நாம் நடத்துகிறோம்.
நாம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து, இந்த உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐந்து காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவித்துள்ளோம்.
அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல வன ஒதுக்கீடு, கோன்கெட்டியாவ வன ஒதுக்கீடு மற்றும் கல்லஞ்சிய ஆகிய ஐந்து காடுகளே, எம்மால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ் இவ்வாறு பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
நாம் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்துவதை 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில் இருந்தே தொடங்கினோம். அன்று நாங்கள் நில்கல, கொட்டவ, துல்ஹிரி கந்த, வேரஹெர மற்றும் உடலியத்த ஆகிய காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவித்தோம்.
நாங்கள் கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி ‘வனஸ்பதி’ திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம்.
சுற்றாடல் அமைச்சு என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு திணைக்களம் என்ற ரீதியிலும் 2025 ஆம் ஆண்டில் 29 காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பிரகடனப்படுத்த முடிந்தது.
2026 ஆம் ஆண்டு உலக வன தினத்தில், அம்பாறை, நுவரெலியா, பதுளை உள்ளடங்கலாக நான்கு மாவட்டங்களை முதன்மைப்படுத்தி மேலும் 50 காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டன.
இதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற ‘எஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்திற்கு இணையாக மேலும் இரண்டு காடுகள் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக மாற்றப்பட்டன.
இன்று பிரகடனப்படுத்தப்பட்ட ஐந்து காடுகளுடன் சேர்த்து, ஒரு வருடத்திற்குள் 86 காடுகளை பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக பிரகடனப்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இது மாபெரும் வெற்றி என்பதைக் கூற வேண்டும்.” – என்றார்.





