இலங்கை செய்தி

சர்வதேசத்திடம் நீதி கோரி முள்ளிவாய்க்கால் திடலில் பிரகடனம் வெளியீடு!

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பா ல் ஈழத் தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

1. பூகோள அரசியலும் தமிழினமும்

அமெரிக்கா உள்ளிட்ட ஏக துருவ நாடுகளுக்கும், சீனா, ரஷ்யா போன்ற பல்துருவ நாடுகளுக்கும் இடையிலான வல்லாதிக்கப் போட்டியில், பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப, எமது தந்திரோபாய உத்திகளை மீளமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

2. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு

ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், முன்னெப்போதும் இல்லாதவாறு நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள-பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக சைவ சமயத் தலங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

தமிழர்களின் பூர்வீக வரலாறு சிதைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படும் ஆய்வுகள் திணிக்கப்படுகின்றன.

இளைய தலைமுறையைச் சிதைக்க ‘போதைப்பொருள்’ ஒரு போர் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றது.

3. சர்வதேச நீதி

தமிழினப் படுகொலைக்கான நீதிப் பொறிமுறைகளைச் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகத் திரிபுபடுத்தி வருகின்றது. நிலமீட்புப் போராட்டங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான குரலையும் வன்முறையால் ஒடுக்குவதை சர்வதேச சமூகம் உற்றுநோக்க வேண்டும்.

4. புலம் பெயர் உறவுகளுடனான பிணைப்பு

தாயகத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் பிரிக்கச் சிங்கள அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, “தொப்புள்கொடி உறவை” மேலும் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐந்து அம்ச சபதம்

இந்த இரத்த சாட்சியமான மண்ணில் நின்று பின்வரும் ஐந்து அம்சக் கோரிக்கைகளை பிரகடனம் முன்வைத்துள்ளது.

தாயகப் பாதுகாப்பு: சிங்கள – பௌத்தமயமாக்கலைத் தடுத்து, தமிழ் தேசத்தைப் பாதுகாத்தல்.

சர்வதேச நீதி: குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல்.

சுயநிர்ணய உரிமை: தமிழர்களின் இறையாண்மையையும், சுயாட்சியையும் அங்கீகரிக்க வலியுறுத்தல்.

இன அழிப்புத் தடுப்பு: ஈழத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்துதல்.

மக்கள் பலம்: தமிழ்த் தேசிய நம்பிக்கையின் கீழ் அணிதிரண்டு, அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுதல்.

“மே 18 என்பது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல, அது தமிழின அழிப்புக்கு எதிரான தேசிய எழுச்சி நாள்” என்கின்ற அறைகூவலுடன் இந்தப் பிரகடனம் நிறைவு பெற்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!