ரஷ்யாவிற்கு தனிப்பட்ட முறையில் போர் பயிற்சிகளை வழங்கிய சீனா – கசிந்த ஆவணம்
கடந்த ஆண்டு ரஷ்ய படைகளுக்கு சீனா தனிப்பட்ட முறையில் போர் பயிற்சி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயிற்சிக்காக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பாதுகாப்பு அமைச்சர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருந்ததாகவும், குறைந்தது நான்கு ரஷ்ய மற்றும் சீனத் தளபதிகள் நேரடியாக பயிற்சி அளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் சீனா உதவிக் கரம் நீட்டுவதையும், ஆதரவளிப்பதையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் பயிற்சி பற்றிய அறிவிப்புகளை சீனா மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சரிபார்க்கப்பட்ட ஆவணத்தின்படி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் (Belousov) இது தொடர்பில் ஒரு உள் ஆணையை பிறப்பித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பெலூசோவின் முடிவின்படி, ரஷ்ய ஆயுதப் படைகளின் ஒரு குழு, மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) பயிற்சி மையங்களில் நடைபெறும் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்குப் பயணம் செய்தது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் பெய்ஜிங்கில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பில் கவனம் செலுத்திய மூன்று வார காலப் பயிற்சி அமர்வு தொடர்பிலும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





