சீனாவில் காலணித் தொழிற்சாலையில் தீ விபத்து:28 பேர் பலி
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலக் கட்டடத்திலிருந்து பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் பலர் தப்பிக்க வழியின்றி கட்டடத்தின் கூரை மீது தவிப்பதுமான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங் (Xi Jinping), இதற்குக் காரணமானவர்கள் மீது “கடுமையான நடவடிக்கை” எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
புஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரம், உலகின் ஒட்டுமொத்த விளையாட்டு காலணிகளில் (Sports shoes) சுமார் 20 சதவீதத்தைத் தயாரிப்பதால், இது சீனாவின் “காலணித் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள ‘ஹுய்டெங்’ (Huiteng) காலணி தொழிற்சாலையிலேயே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மதியம் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் சுமார் 240 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து 213 பேரைப் பத்திரமாக வெளியேற்றினர்.
எனினும், மீட்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 26 பேரும் கட்டடத்திற்குள் சடலங்களாக மீட்கப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 28 ஆக உயர்ந்தது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் தரைத்தளத்திலிருந்தே (Ground floor) தீ பரவத் தொடங்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் தரப்பில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் வங்கிச் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.




