அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: அவசரமாக கூடிய பெண் எம்.பிக்கள்: நடந்தது என்ன?
அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இன்று (25) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை 2026.06.05 ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
பௌத்த பிக்கு ஒருவரே, மேற்படி துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




