“ஜனநாயகத்தை வலுப்படுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்”
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில் சமூகமும் மற்றுமிரு முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நீதிமன்றத்திற்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுவதற்கும் அரசாங்கம் முற்பட்டு வருகின்றது என்றார்.
இதன் மூலம், நீதியரசர்களின் சுதந்திரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஜனநாயகத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் எடுக்கும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய நீதியரசர்களை நியமிக்காது, அவ்வெற்றிடங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதே நீதிமன்றத்தின் மீது ஏற்படுத்தப்படும் ஒருவகை அழுத்தமாகும். எனினும், நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயல்முறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியையும் நியாயத்தையும் பாதுகாக்கும் கொள்கைகளை உறுதிப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும், முற்போக்கு எதிர்க்கட்சியும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகத்திலும் நீதிமன்றத்திலும் கை வைக்காது, அதன் சுயாதீனத்தில் தலையீடுகளை மேற்கொள்ளாமல், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணையானது, நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல; மாறாக, ஜனநாயகத்தை வலுப்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே ஆகும்.
இந்த மக்கள் ஆணையை நிராகரிப்பது, மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


