அனுரவுக்கு அவசர கடிதம்!!
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பிகள் சிலர் ஜனாதிபதி அனுரகுமரா திஸாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது என்பதே அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
எனவே, ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் சமநிலையான முறையில் ஆய்வு செய்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேக நபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.




