தனியார் பேருந்துகளின் சேவையை 50 சதவீதம் குறைக்க நடவடிக்கை!
எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களின் விலையை அதிரிக்க தனியார் போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் பேருந்துகளின் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50 சதவீதமாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.




