யாழில் சுகாதார தொண்டர்கள் நீதிகோரி போராட்டம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வருபவர்கள், இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தது.
“ நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த சேவையை நிலையான ஊதியம் கூட இன்றி முன்னெடுத்துவருகின்றோம்.
கொழும்பில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இன்று அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் இளங்குமரன் ஆகியோர் வருகைதந்து பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.





