தியாகி பொன். சிவகுமாரன் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் ஆரம்பத்தில், பொது ஈகைச் சுடரினை தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த முக்கியஸ்தர்கள் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து, தியாகி பொன். சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணிகளான நடராஜா காண்டீபன், வி. மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை தவிசாளர்கள் சார்பில் தி. பிரகாஷ் மற்றும் முன்னாள் போராளிகள் சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.






