புலிகளுக்காக எனது ஆதரவு குரல் ஒலிக்கும: வைகோ சூளுரை!
“நான்; எப்போதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன்.”
இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ MDMK General Secretary Vaiko தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோவால் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2014-ல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போத வைகோ நேரில் முன்னிலையாகி,
“இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அங்குள்ள தமிழ் கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர்,
“ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இறுதியாக 2024-ம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல.
மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல. டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளது” என்று சுட்டிக்காட்டினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் ஈழத்துக்காக போராடும் போராளிகளின் உண்மை நிலவரத்தை இந்த வழக்கின் மூலமாக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்துள்ளேன்.
இந்தப் போராட்டம் இத்துடன் ஓயாது.” -எனவும் வைகோ குறிப்பிட:டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கல்லூரிகள் தோறும் சென்று புத்தகங்கள், சிடிக்களை விநியோகம் செய்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வேன்” என வைகோ மேலும் குறிப்பிட்டார்.





