ஆப்கானில் இரு பள்ளிகளில் விஷம் வைப்பு … 80 மாணவிகள் மருத்துவமனையில்!
ஆப்கானிஸ்தானின் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.
இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.
கல்வி துறை விசாரணையை தொடங்கி நடத்தி உள்ளது. இதில், 3வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார். எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது.