இலங்கை செய்தி

06 மின்கல எரிசக்தி சேமிப்பு தொகுதிகள் இன்று கொழும்பு வருகை

2025 ஜூலை மாதத்தில் அரசாங்கத்தினால் 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட 16 மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்காக (BESS) சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த டெண்டர்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதன் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, விண்ட்போர்ஸ் பிஎல்சி (Windforce PLC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 6 தொகுதிகள் இன்று (30) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த அமைப்புகள் மாஹோ, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார விநியோக உப-நிலையங்களுக்கு (Sub-stations) அருகில் நிறுவப்படவுள்ளன.

இந்த அமைப்பொன்றின் மூலம் பகல் நேரத்தில் 40 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்பதுடன், இரவு நேரத்தில் மின்சார தேவை உச்சத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களில் 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்குள் விடுவிக்க முடியும். இந்த ஆறு அமைப்புகளிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த கொள்ளளவு 60 மெகாவாட்டாகும்.

இந்த மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளின் (Battery Energy Storage System – BESS) கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை என்பன எரிசக்தி அமைச்சின் கீழ் உள்ள தேசிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அதேவேளை, அதன் பராமரிப்புப் பணிகள் உரிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இலங்கையில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் இந்த மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளின் மூலம், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதும், நுகர்வோருக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்குவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது எரிபொருள் மூலம் ஒரு அலகு (Unit) மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 115 ரூபா செலவிடப்படும் அதேவேளை, இந்த BESS அமைப்புகளின் மூலம் அந்தச் செலவை 30 ரூபா வரை குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கும், எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்திக்காக மாதந்தோறும் செலவிடப்படும் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சவால்கள், அதேபோன்று எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியின் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தேசிய மின்சார விநியோகத்திற்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை