சீனாவுக்கு ‘செக்’ – பிஜி நாட்டுடன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒப்பந்தம்
ஆஸ்திரேலியா மற்றும் பிஜி (Fiji) ஆகிய நாடுகளுக்கிடையில் இடையே புதிய பாதுகாப்பு கூட்டணி (Defence alliance) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உடன்படிக்கைக்கு மேலதிகமாக இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாய நிலப்பரப்பில் (Strategic landscape) முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
பிஜியின் தலைநகரான சுவாவில் (Suva) நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) மற்றும் பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா (Sitiveni Rabuka) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிஜியில் எல்லை தாண்டிய குற்றங்களை (Transnational crime) எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலிய அரசு , அடுத்த பத்து ஆண்டுகளில் $1 பில்லியனுக்கும் அதிகமான தொகையைச் செலவிடவுள்ளதாக பிரதமர் அல்பானிஸ் தெரிவித்தார்.
“சமாதான சமுத்திரக் கூட்டணி” உடன்படிக்கையின் படி, இரு நாடுகளின் இறையாண்மை (Sovereignty), அமைதி அல்லது ஸ்திரத்தன்மைக்கு (Stability) அச்சுறுத்தல் ஏற்படுத்தும் “பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள்” குறித்து இரு தரப்பும் கலந்தாலோசித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
சீனா, ஆஸ்திரேலியாவின் சமீபத்திய சில மூலோபாய ஒப்பந்தங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆஸ்திரேலியா தனது “புவிசார் அரசியல் கருவியாக” (Geopolitical tool) இந்த ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்திலிருந்து சீனாவை வெளியேற்ற முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சீனாவிடமிருந்து இதற்கு “கடுமையான எதிர்ப்பு” வரும் என்று தான் நம்பவில்லை என்று பிரதமர் ரபுகா தெரிவித்தார். “ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையிலான இந்த புரிந்துணர்வை அவர்கள் வரவேற்பார்கள் என்றே நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.





