சோப்புக்குள் ஹெரோயின்: யாழில் நூதனக் கடத்தல் முறியடிப்பு
வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமாக இடம்பெறுகின்றது என்று கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாசனைச் சோப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டிலும், கடந்த மாதமும் இதேபோன்ற போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவித்தார்.
மேலும், யாழ். பொலிஸ் பிரிவில் மாத்திரம் இந்த வாரத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.




