முப்படைகளை பலப்படுத்தவும்: பொன்சேகா அவசர அறைகூவல்!
“பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது. இராணுவம் வலுப்படுத்த வேண்டுமேதவிர, படை குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“எமது நாடு மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியை சந்தித்த நாடாகும். அதேபோல வெளியக அழுத்தங்களும் வரக்கூடும். எனவே, பாதுகாப்பு விடயத்தில் தளர்வுகளை மேற்கொள்ளக்கூடாது.
முப்படைகள் பலமாக இருக்க வேண்டும். புலனாய்வு அமைப்புகள் வலுவாகவே இருக்க வேண்டும்.
நாம் போரை முடிக்கும்போது வலுவான இராணுவம் இருந்தது. தற்போது அதில் 20 சதவீதமானோர் தற்போது எஞ்சி இருக்கலாம். ஏனையோர் ஓய்வு பெற்றிருக்கலாம்.
போர் ஏற்பட்ட பிறகு கட்டியெழுப்புவது அல்ல ராணுவக் கட்டமைப்பு. போர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராணுவம் வலுவாகவே இருக்க வேண்டும்.
நான் விலகும்போது 2 லட்சம் இராணுவத்தினர் இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. படை குறைப்பு பற்றி பேசப்படுகின்றது. அது ஏற்புடைய விடயம் அல்ல. முப்படைகள் பலமாகவே இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும் வரவு- செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கே அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது.” – என்றார்.




