அணுசக்திப் படையை வலுப்படுத்த பியோங்யாங் உறுதி
வடகொரியா தனது அணுசக்திப் படையை “தரத்திலும் அளவிலும்” வலுப்படுத்தவும், தனது உளவுத்துறையின் பங்கை விரிவுபடுத்தவும் உறுதியளித்துள்ளது.
நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தில், நாட்டின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கிம் ஜொங் உன், ஒரு வலிமையான இராணுவத்தால் மட்டுமே “உண்மையான அமைதிக்கு” உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
“சாத்தியமான எதிரிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதிலும், முக்கிய தகவல்களைச் சேகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பொது உளவு மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் செயல்பாடுகளையும் பணிகளையும் பல வழிகளில் விரிவுபடுத்துவதற்கும், அதன் இராணுவ உளவு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் திறனை தீவிரமான முறையில் மேம்படுத்துவது அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே கடந்த பத்தாண்டுகளாக பியாங்யாங் தனது அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்தி வருவதாகவும், இது அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு அதிகரித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்காவின் காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை கூறுகிறமை குறிப்பிடத்தக்கது.




