யாழில் 3 தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (15) நடைபெற்றது.
வலுசக்தி அமைச்சினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், இந்த ஆண்டில் நிறைவு செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது செயல்பாட்டிலுள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்பு (Hybrid Renewable Energy System – HRES) திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதி, அத்தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக அபிவிருத்தி செய்யவும், மேம்படுத்தவும் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், ஜெய்கா நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட வலுசக்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான 2027 வரவுசெலவுத் திட்ட நிதித் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.




