நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியப் பிரஜையின் மரணம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
இருப்பினும், இச்சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ தூதரக குறிப்பு (Note Verbale) ஒன்று, இந்திய தூதரகத்தால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஏனைய இந்தியக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




