வடக்கில் ஆடிப்பிறப்புப் பெருவிழா
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது வாழ்த்துரையை நிகழ்த்தினார். விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஆளுநர் செயலகப் பணியாளர்களால் இனிமையான ‘ஆடிப்பிறப்புப் பாடல்’ பாடப்பட்டு சபையோரை மகிழ்வித்தது.
பாரம்பரிய விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆடிப்பிறப்பு விழாவானது, ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் கே.கமலபாகு நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.





