மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சுவிட்ஸர்லாந்து : வாக்கெடுப்பு நிறைவு!
நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இன்று பொது வாக்கெடுப்பை நடத்தியது.
இதில் வாக்காளர்கள் வாக்கெடுப்பை நிராகரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்மூலம் தொழிலாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் இருதரப்பு சந்தை அணுகல் தொடர்பாக பிரஸ்ஸல்ஸுடன் உடனடி மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பகட்ட முடிவுகளின்படி, கிட்டத்தட்ட 54 சதவீதமான வாக்காளர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்துள்ளனர்.
2050-ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கும் குறைவாக வைத்திருப்பதை ஒரு அரசியலமைப்பு இலக்காக நிர்ணயிக்கும் சர்ச்சைக்குரிய முன்மொழிவை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்திருந்தது.
குடியேற்றம், வீட்டு வசதி செலவுகள், பொது சேவைகள் மீதான அழுத்தம் மற்றும் உள்கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்த கவலைகளால் இந்த முன்மொழிவு உந்தப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 7.2 மில்லியனிலிருந்து 2026-ல் 9 மில்லியனுக்கும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளது.
இவர்களில் சுமார் 64 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




