கந்தளாயில் கஞ்சா தோட்டம் முற்றுகை!
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கேலே – சோமாவதி காப்பகத்தில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நன்கு வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்றைக் கண்டறிந்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சுமார் 18,750 கஞ்சா செடிகள் இருந்துள்ளன.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக, கந்தளாய் கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் பி. செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் கோட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






