பிழையான சத்திர சிகிச்சைகள் – NHSஐ நாடும் மக்களுக்கு அதிர்ச்சி!

பிரித்தானியாவில் NHS மருத்துவ சேவையில் இடம்பெற்ற பல முறைக்கேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒருபோதும் நிகழக்கூடாத 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமை அல்லது பிழையான சத்திரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது சுகாதார சேவையில் உள்ள முக்கிய தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்வுகளில் 166 தவறான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய சத்திரசிகிச்சை தவறுதலாக மாறி வேறு ஒருவருக்கு செய்யப்பட்ட 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல் தவறான உடல் பாகத்தில் செய்யப்பட்ட 40 சத்திரசிகிச்சைகளும் இதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சத்திரசிகிச்சைக்கு பிறகு உடல் பாகத்தில் தவறுதலாக கத்திரிகோள் உள்ளிட்ட பிற பொருட்கள் விடப்பட்ட 121 சம்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
(அவற்றுள் 26 வழிகாட்டிக் கம்பிகள் வைக்கப்பட்ட சம்பவங்கள், 21 அறுவை சிகிச்சைத் துடைப்பான்கள் மற்றும் 22 அறுவை சிகிச்சைக் கருவிகள் வைக்கப்பட்ட சம்பவங்கள் அடங்கும்.)
அதேநேரம் சுமார் 50 ஒருபோதும் நிகழக்கூடாத நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கண் வில்லைகள் உள்ளிட்ட தவறான உள்வைப்பு அல்லது செயற்கை உறுப்புகளை உள்ளடக்கியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், 17 நிகழ்வுகளில் மருந்துகள் தவறான வழியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 15 நிகழ்வுகளில் வாய்வழி மருந்துகள் நரம்பு வழியாகச் செலுத்தப்பட்டன என்றும் அறிவிக்கைகள் தெரிவித்துள்ளன.
மேலும் இடம்பெற்ற கடுமையான தவறுகளில், 14 நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு அதிகமாகக் கொடுக்கபட்டுள்ளது. ஒன்பது நோயாளிகளுக்குத் தவறான இரத்த வகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







