முடிந்துபோன வாழ்க்கைக்கு 24 ஆண்டுகளாக போராட்டம்!! 6.6 மில்லியன் பவுண்டுகளை வென்ற பெண்!
இருபது ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தோன்றிய விவாகரத்து வழக்கொன்றில் இந்திய பெண் ஒருவர் 6.6 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார்.
இந்த விசித்திரமான வழக்கு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தாயகமாகக் கொண்ட வர்ஷா கோஹில் என்ற பெண் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரிடம் இருந்து விவகாரத்து கோரியுள்ளார்.
2002-ல் வர்ஷா கோஹில், தனது கணவர் பத்ரேஷ் கோஹிலை பிரிவதற்கு விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார். இதற்கமைய கணவரான பத்ரேஷ் அவருக்கு ஜீவனாம்சமாக 270,000 பவுண்டுகளையும் (சுமார் 3.5 கோடி ரூபாய்) கார் ஒன்றையும் வழங்கியிருந்தார்.
இருப்பினும் வர்ஷாவிற்கு தனது கணவர் நிதிநிலைமை குறித்து பொய் உரைப்பதாக தோன்றியுள்ளது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நைஜீரியாவின் முன்னாள் ஆளுநர் ஜேம்ஸ் இபோரியின் கூட்டாளிகளுடன் தொடர்புடைய ஒரு பெரிய பணமோசடி விசாரணையில் பத்ரேஷ் கோஹில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2011-ல், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த விசாரணையில், அசல் விவாகரத்து நடவடிக்கைகளின் போது வெளிவராத, பல கோடி பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல நாடுகளில் செயல்படும் நிறுவனங்களின் வலையமைப்பு மூலம் மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சுமார் 28 மில்லியன் பவுண்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முடக்கினர்.
இதனைத் தொடர்ந்து வர்ஷா மீளவும் தனது விவகாரத்து வழக்கை புதுப்பித்தார். வழக்கு பிரித்தானியாவின் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இருப்பினும் அரசதரப்பு வழக்கறிஞர்கள் முடக்கப்பட்ட சொத்துக்கள் முழுவதுமாக குற்றத்தின் மூலம் கிடைத்தவை என்றும், அவை பறிமுதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இந்நிலையில் செல்வத்தின் ஒரு பகுதி திருமணத்தின் போது சட்டப்பூர்வமான வணிகங்கள் மூலம் ஈட்டப்பட்டது என்றும், எனவே அது திருமணச் சொத்தாகக் கருதப்படுகிறது என்றும் வர்ஷா வாதிட்டார்.
இவ்வாறாக இந்த வழக்கு விசாரணை இழுபறியில் இருந்தது. இறுதியாக வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் முடக்கப்பட்ட சொத்துக்கள் மீதான முரண்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்தது.
செல்வத்தின் ஒரு பகுதி சட்டப்பூர்வமான தோற்றம் கொண்டது என்றும், அது தம்பதியரின் திருமணச் சொத்தின் ஒரு பகுதியாகும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் சுமார் 6.66 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான களங்கமற்ற சொத்துக்களை அடையாளம் கண்டு, அந்தத் தொகையை வர்ஷா கோஹிலுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
இறுதியாக 24 ஆண்டுகளாக இடம்பெற்ற வழக்கு விசாரணை வர்ஷாவிற்கு சாதகமாக முடிந்துள்ளது.





