அமெரிக்க விமான நிலையத்திற்கு வெடிகுண்டுடன் வந்த நபரால் பரபரப்பு!
அமெரிக்காவின் சாக்ரமெண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாக்சன் என்றும் அறியப்படும் கிமானி ஒசயாண்டே ஜோன்ஸ் (Kimani Osayande Jones) என்ற நபர் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
49 வயதான ஜோன்ஸ், லேடெக்ஸ் கையுறைகள் மற்றும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்திருந்ததாகவும், அவரிடமிருந்து ஒரு டார்ச் லைட்டர், ஒரு கத்தி, ஜிப் டைஸ் மற்றும் ஐந்து கையடக்க தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறித்த 05 கையடக்க தொலைபேசிகளில் ஒன்றில் 15 நிமிட கவுண்ட்டவுன் டைமரும், மற்றொன்றில் “நாங்கள் உங்கள் அழைப்புக்காகக் காத்திருப்போம்” என்ற செய்தியும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் அவரிடம் விமானத்தை சேதப்படுத்தக்கூடிய வெடிக்கும் பொருளொன்று இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




