பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடும் வெப்பத்துடனான வானிலை காரணமாக, சிறுவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கப் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
அதிகப்படியான தூக்கக்கலக்கம் அல்லது சோம்பல், பசியின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடம் தென்பட்டால் அவர்கள் நீர்ச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சிறுவர்களுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான பானங்களை (Natural fluids) வழங்குவது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை காரணமாக சிறுவர்களுக்கு சருமத் தடிப்புகள் (Skin rashes) மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, குழந்தைகளை ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது நீராடச்செய்யுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் மாணவர்கள் நீர்ச்சோர்வு மற்றும் வெப்பத்தாக்கத்திற்கு (Heatstroke) உள்ளாகும் அபாயம் அதிகம் காணப்படுகிறது.
முறையான நீராகாரம் உட்கொள்ளாவிடில், இது உயிரிழப்பு போன்ற பாரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சிறுவர்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





