தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும்: மனோ கோரிக்கை!
“ சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance தலைவர் மனோ கணேசன் எம்.பி. Mano Ganesan கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பற்றிக்குடன் Andrew Patrick நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
மலையகத் தமிழர்
குறிப்பாக, இன்றைய, அரசு முன்னேடுக்கும், ரூபா 50 இலட்ச தித்வா மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் ஆகிய அரசாங்க நிவாரண திட்டங்களில் பாதிக்க பட்டுள்ள மலையக மக்கள் ஒதுக்கி வைக்கபட்டுள்ளார்கள்.
ஏனைய மக்களுக்கு வழங்க படும் தித்வா வீடமைப்பு நிவாரணங்கள் நமது மக்களுக்கு இல்லை.
நாம் என்ன இந்திய பிரஜைகளா? இது இரண்டாம் தர இலங்கை குடியுரிமை இல்லையா? இது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.
மேலும், இன்று மலைநாட்டில், காணியுரிமையை மறுத்து, தொடர்மாடி கட்ட இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டுகிறது. காணி உரிமை மறுக்க படும் எந்த ஒரு அரசாங்க திட்டத்தையும் நாம் ஏற்று கொள்ள போவதில்லை. இவற்றுக்கு எதிராக நாம் மக்களை அணி திரட்டி போராடுவோம்.
ஆகவே, மலையக தமிழருக்கு நியாயம் பெற்று தருவதில், அவர்களின் குடியுரிமை முழு குடியுரிமையாக வழங்க படுவதில சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகிக்க வேண்டும் என நான் கோருகிறேன்.
ஈழத்தமிழர்
ஜனாதிபதி அடிக்கடி வடக்குக்கு போய் வருகிறார். அங்கே பொங்கல் கொண்டாடுகிறார். இளைஞர்களுடன் “செல்பி” எடுக்கிறார்.
காலையில் நடை பயிற்சி செய்கிறார். மக்களுடன் உரையாடுகிறார்.
ஆனால் அங்கே தான் செய்து தருவதாக வாக்களித்த அனைத்தையும் காலவரை இன்றி இன்று அவர் ஒத்தி வைத்து விட்டார்.
உறுதி அளித்த மாகாணசபை தேர்தல் இல்லை. மாகாணசபை நிர்வாகம் ஆளுநர்கள் மூலம் நடத்த படுகிறது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்றார்கள்.
இன்று நீக்கம் இல்லையாம். இன்னொரு புதிய சட்டம் கொண்டு வர முயல்கிறார்கள். காணி விடுவிப்பு நின்று போய் விட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள்.
இன்று எஞ்சி உள்ள பன்னிரெண்டு நீண்டகால கைதிகளை விடுவிக்க மறுக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு பேச்சுகளை இதோ, அதோ, ஆரம்பிப்போம் என்றார்கள். அனைத்தும் அலங்கார வார்த்தைகளுடன் தொக்கி நிற்கின்றன.
ஆகவே, சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகிய அணிகளுக்கு பிரித்தானியா தலைமை பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என நான் கோருகிறேன்.” – என்றுள்ளது.





