சிறைச்சாலைகளில் 70 சதவீதமானோர் போதைக்கு அடிமை
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, ஜனாதிபதி தலைமையில் கூடியது.
மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.
அத்துடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அது விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தை மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.





