16 ஆண்டுகால பயணம் நிறைவு: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்
நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர் (Neymar Jr.) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading scorer) என்ற பெருமையுடன் விடைபெறுகிறார்.
முன்னாள் பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப் நட்சத்திரமான நெய்மர், 2010 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் தனது முதல் போட்டியை எந்த நியூ ஜெர்சி ‘மெட்லைப்’ (MetLife) மைதானத்தில் விளையாடினாரோ, அதே மைதானத்தில் தனது இறுதிப் போட்டியையும் விளையாடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேக்கு எதிரான இப்போட்டியில் மாற்று வீரராக களம் புகுந்த அவர், ஒரு பெனால்டி கோல் அடித்த போதிலும், அது பிரேசிலின் அதிர்ச்சித் தோல்வியைத் தடுத்து நிறுத்த உதவவில்லை.
ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு பிரேசில் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டதும், நெய்மரால் தனது துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
மைதானத்திலேயே அமர்ந்து அவர் ஓயாமல் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் இதயங்களை உடைத்தன.
அவரது பிரேசில் சக வீரர்கள் பலர் ஓடிவந்து அவரைத் தேற்றி, ஆறுதல் கூற முயன்றபோதிலும், இந்த முன்னாள் பார்சிலோனா நாயகன் முற்றிலும் நிலைகுலைந்து, மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.




