06 தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: இன்று கொழும்பில் நிகழ்வு
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (13) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் இதன் நோக்கம் பற்றி தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஆளும் மற்றும் எதிரணிகளிடம் கொண்டுசெல்வதற்கு பொதுமேடையொன்று அவசியம். அதற்கான முயற்சியாக இது அமையும் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு சங்கமிக்கவுள்ளன.
இதற்குரிய ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்த பொதுவான விடயங்களில் கூட்டாகக் குரல் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.
ஆரம்பக்கட்ட கலந்துரையாடலின் பின்னர் இதனை மேலும் விஸ்தரிப்பது பற்றி அவதானம் செலுத்தப்படவுள்ளது.




