அமெரிக்க-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? வெளியான காரணம்
லெபனான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததன் காரணமாக, இன்று காலை நிலவரப்படி மேலும் 16 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய நடவடிக்கைகள் காரணமாக ஈரானிய தூதுக்குழுவால் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சக வட்டாரங்களின்படி, தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பாகிர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட முழுமையாகத் தயாராக இருந்தனர்.
ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காரணமாக, ஈரானிய தூதுக்குழுவின் பயணம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவுடனான ஒத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான புதிய திகதி அல்லது இடம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, லெபனானில் இஸ்ரேல் நடத்திய நடவடிக்கை, சமீப வாரங்களில் நடந்த மிக மோசமான குண்டுவீச்சு என விவரிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பர்கன்ஸ்டாக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் இனி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிட்சர்லாந்து புறப்பாடு தாமதமானதைத் தொடர்ந்து, சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வெளியானது.
பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் எளிதாக்குவதற்கும் சுவிட்சர்லாந்து தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் பர்கன்ஸ்டாக்கில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கான புதிய திகதி குறித்து சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தகவல் அளிக்கவில்லை என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



