நீங்கள் மதிப்பு மிக்கவர்கள்……!
சுய சரிபார்ப்பு திறன் என்பது நம்மையும் நம் உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளும் பயணமாகும். கடினமான உணர்ச்சிகளை வெளிக்கொணர ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவதும், நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை அறிந்துகொள்வதும் நம்மைச் சரிபார்த்துக் கொள்வதில் முக்கியமானது.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் அற்புதமானவர்கள். அதேநேரம் புரியாத புதிராக இருப்பவர்கள். நம் வாழ்நாளில் பல நாட்கள் பிறர் என்ன நினைக்கிறார்கள், எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள், என்பதை யோசித்தே நாட்களை கடத்துகிறோம். மன்னிக்கவும், அந்த எண்ணவோட்டத்திலேயே பொழுதை வீணடிக்கிறோம்.
பிறரின் எண்ணங்கள் உங்கள் கற்பனை சக்திக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் யோசிக்கும் விடயங்களை அவர்கள் வேறு ஒரு கோணத்தில் இருந்து, அல்லது வேறு ஒரு பரிமாணத்தில் இருந்து தன்சார்ந்த நலன்களை முன்னிறுத்திதான் பார்ப்பார்கள். உங்களுடன் நட்பு பாராட்டும் நூற்றில் 90 வீதமானவர்கள் அப்படியான சிந்தனைகளை கொண்டவர்கள் தான். ஆகவே அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்களை வரையறுத்துக்கொள்ளாதீர்கள்.
இவை சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தாழ்வு மனப்பாண்மையை தோற்றுவிக்கக்கூடும். நீங்கள் தனித்துவமானவர் என்பதை முதலில் உணருங்கள். உங்கள் எண்ணங்களை பிறர் காயப்படாத வகையில் அதேநேரம் உங்களை மகிழ்விக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இப்பொழுது நடப்பதை நினைத்தோ, அல்லது நாளை நடக்கப்போவதை நினைத்தோ கவலைப்படாதீர்கள். கீதாசாரத்தில் சொன்னதைப்போல எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும். காலத்தின் கையில் உங்களை ஒப்படைத்து விடுங்கள். காலம்போல் ஆற்றவல்ல மருந்து இந்த உலகின் எந்த பார்மசிகளிலும் கிடைப்பதில்லை.
இப்பொழுத நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எல்லாவற்றையும் விட நீங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை உணருங்கள். உங்களுடைய உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த வொரு விடயத்தையும் நேர்,மறை எண்ணங்களுடன் அணுகுங்கள். இந்த வாழ்க்கை உங்களுக்கானது. இந்த உலகம் உங்களுக்கானது. நீங்கள் மதிப்பு மிக்கவர்கள்…….!