தமிழின விடுதலைக்காக விஜய்யிடம் ஆதரவு கோருகிறது தமிழரசுக் கட்சி!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழகத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக, ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரை நூற்றாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்த உங்களின் கொள்கை உறுதி வியக்கத்தக்கது.
இலங்கை வாழ் தமிழர்களாகிய நாம், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றோம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் மொழி, கலை, கலாசாரம் மற்றும் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலக்காகக் கொண்டு நாம் போராடி வருகின்றோம்.
எமது இனத்தின் விடுதலைக்கான போராட்டத்துக்குத் தாங்கள் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும்.
உங்களின் ஆட்சிக் காலத்திலேயே ஈழத் தமிழினம் ஒரு கௌரவமான அரசியல் விடுதலையைப் பெற்றிட சகல ஒத்துழைப்புகளையும் வேண்டி நிற்கின்றோம். நீங்களும் உங்கள் கட்சியும் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசை வழங்கிடப் பிரார்த்திக்கின்றோம்.” – என்று அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




