கோட்டாபய குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாம் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. சிஐடியின் (குற்றப் புலனாய்வு திணைக்களம்) கோரிக்கையின் நோக்கம் பற்றியே தெளிவுபடுத்துகின்றோம்.
சுரேஷ் சலே இன்னமும் தடுப்பில் உள்ளார். அவர் வதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்.
தற்போதுள்ள சிஐடி பணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர், தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடையில் பேசியவர்கள். எனவே, இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விசாரணைகளில் கோட்டாபய ராஜபக்ச, சுரேஸ் சலே ஆகியோரின் பெயர்கள் அடிபடவில்லை.
எனவே, FBI ஆல்கூட கண்டுபிடிக்க முடியாமல்போனதையா சிஐடி கண்டுபிடிக்க முற்படுகின்றது?
அரசியல் தஞ்சத்துக்காகவே அசாத் மௌலானா சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிடுகின்றார். அந்த கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு விசாரணை இடம்பெறுவது ஏற்புடையது அல்ல.
அரசாங்கம்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே கோட்டாபய, சலே ஆகியோர் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். இது தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் செயலாகும்.” – என்றார் சரத் வீரசேகர.





