ஹோர்முஸ் ஜலசந்தி முதல் அணுசக்தி வரை : இறுதி ஒப்பந்தத்தின் வரைவு வருமாறு
அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் அணுசக்திப் பணிகள் முதல் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் எண்ணெய் தடைகள் மீதான அமெரிக்காவின் விலக்குகள் வரை பலதரப்பட்ட பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து வரும் 60 நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த வரைவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் வருமாறு,
ஹோர்முஸ் ஜலசந்தி:
ஈரான் அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக மீண்டும் திறக்கப்படும். அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை நீக்கும்.
அமெரிக்க முற்றுகையை நீக்கும் பணி, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே தொடங்கி 30 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
நிதி
இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் மீது எந்தவொரு புதிய தடைகளையும் விதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும்.
இறுதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒப்புக்கொள்ளப்பட்ட கால அட்டவணைப்படி ஈரான் மீதான அனைத்து அமெரிக்க மற்றும் ஐ.நா. தடைகளும் நீக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஈரான் மீதான எண்ணெய் தடைகளை அமெரிக்கா தளர்த்தும், இது தெஹ்ரான் எண்ணெயை விற்கவும் வருவாய் பெறவும் அனுமதிக்கும்.
நேரடி பணப் பரிமாற்றங்கள், பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நிதிக் கடன் வசதிகள் உள்ளிட்ட வழிகளில், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் 25 பில்லியன் டொலரை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது.
வொஷிங்டன், தனது பிராந்திய நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, ஈரானுக்கான ஒரு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்கும். இது 60 நாட்களுக்குள் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்புக்கொள்ளப்படும்.
அணுசக்தி:
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ அல்லது கையகப்படுத்தவோ மாட்டோம் என்று தெஹ்ரான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும், மேலும் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணுசக்தி வசதிகளை விரிவுபடுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளும்.
எதிர்காலத்தில் கையெழுத்தாகும் ஒரு விரிவான ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் தனது மண்ணில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை நீர்த்துப்போகச் செய்ய அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டம், யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகள் மற்றும் அதன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கையாள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி ஒப்பந்தத்தில் விவாதிக்கப்படும்.





