யானை தாக்கி பெண் பலி : திருமலையில் சோகம்!
திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.
திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
யானை தாக்கி காயமடைந்த இப் பெண் சேருவில வைத்தியசாலையிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் (10) நேற்றிரவு யானை தாக்கியதில் ஏ.டபிள்யூ. ஜெயரத்ன (69 வயது) என்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார்.
கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.





